2026 ஆம் ஆண்டின் 'ஆபத்தில் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்' விருது உமர் காலிதுக்கு அளிப்பு

2020 செப்டம்பர் 13 முதல் விசாரணையின்றி திஹார் சிறையில் இருந்து வருகிறார்.
 உமர் காலித்
Published on: 
Summary

2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் இருந்து வரும் சமூக ஆர்வலர் உமர் காலித், 2026ஆம் ஆண்டுக்கான 'ஆபத்தில் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்கள்' விருதை வென்றுள்ளார்.

'ஆபத்தில் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்கள்' விருதை, அயர்லாந்தை சேர்ந்த 'ஃபிரன்ட் லைன் டிஃபெண்டர்ஸ்' என்ற மனித உரிமைகள் அமைப்பு வழங்குகிறது.

நேற்று டப்ளினில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இருப்பினும், உமர் காலித் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. அவர் 2020 செப்டம்பர் 13 முதல் விசாரணையின்றி திஹார் சிறையில் இருந்து வருகிறார்.

விசாரணையின்றி சிறை

மத்திய அரசு கொண்டு வந்த குடிமக்கள் திருத்த பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரை வஞ்சிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 2020 இல் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஜெஎன்யு பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் உமர் காலித், சார்ஜில் இமாம் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினர். ஆனால் போராட்டத்தில் திடீரென ஏற்பட்ட கலவரத்தால் 53 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

உமர் காலிதின் பேச்சு தான் கலவரத்தை தூண்டியதாக அவரும் சார்ஜில் இமாமும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பிரதமர் மோடியையும் இந்தியாவின் இறையாண்மையையும் அவமதிக்கும் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக உமர் காலித் வன்முறைக்கு அழைப்பு விடுத்ததாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.

பலமுறை அவர்கள் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இன்னும் முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யாமல் 6 வருடகாலமாக அவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.

கடைசியாக கடந்த ஜனவரி 5 அன்று, உச்ச நீதிமன்றம் அவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்தது. பின்னர், செப்டம்பர் 30 அன்று, டெல்லி உயர் நீதிமன்றமும் அவர்களது ஜாமீனை நிராகரித்தது.

கண்டனம்

இந்தியாவில் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கு காலித்தின் நீண்டகால சிறைவாசம் சான்றாகும் என்றும், அவரைப் பற்றிய பொதுமக்களின் கருத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கையும் விருது வழங்கிய அந்த அமைப்பு கண்டித்துள்ளது.

மேலும் "அமைதியான முறையில் கூடுவதற்கும் கருத்துச் சுதந்திரத்திற்குமான தங்கள் உரிமையைப் பயன்படுத்தும் மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது இந்தப் போக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com