லட்டு வீடியோ - 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது டிஜிபியிடம் தமிழக பாஜக புகார்

பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது.சமூக வலைத்தளங்களில் லட்டு பரிதாபங்கள் விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
laddu parithabnagal - bjp
Published on

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.

லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்... அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த புகாரில், 'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர். ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை இழிவுபடுத்தியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com