போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை: தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை

ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
obtaining SIM cards
Published on
Summary

தங்களது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை மற்றவர்களிடம் விற்பனை செய்வதோ, வாடகைக்கு விடுவதோ அல்லது பயன்படுத்தக் கொடுப்பதோ கூடாது என தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம் கார்டுகளைப் பெறுவது, பிறர் பெயரில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்துவது மற்றும் செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றியமைப்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டவிரோத சிம் கார்டு விநியோகம்

நாட்டில் அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள், இணையவழி நிதி மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முகவர் ஒருவர், பொதுமக்களின் அடையாள ஆவணங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே பயன்படுத்தி 25 சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விற்பனை மையம் முடக்கப்பட்டு, போலி சிம் எண்கள் அனைத்தும் உடனடியாகச் சேவையிலிருந்து நீக்கப்பட்டன.

தங்களது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை மற்றவர்களிடம் விற்பனை செய்வதோ, வாடகைக்கு விடுவதோ அல்லது பயன்படுத்தக் கொடுப்பதோ கூடாது என தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. தங்களது ஆவணங்களைப் பயன்படுத்தி யாரேனும் போலி சிம் கார்டுகளைப் பெற்று மோசடிகளில் ஈடுபட்டால், ஆவணத்தின் உண்மையான உரிமையாளரும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை பயன்படுத்தி எத்தனை கைபேசி எண்கள் பெறப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்க மத்திய அரசின் ‘சஞ்சார் சாதி’ என்ற இணையதள சேவையைப் பயன்படுத்தலாம். அதில் தங்களுக்குத் தெரியாத அல்லது தேவையில்லாத எண்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாகத் பிளாக் செய்யவும் அல்லது புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com