

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் விஜய் இது ஒரு படுகொலை என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் மற்ற தமிழ்நாடு தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-
“இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது. நான் தமிழ்நாடு விவகாரங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை, மேலும் உங்கள் நிர்வாகம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவும் இல்லை.
ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய சவால்களை எதிர்கொள்கிறது. கர்நாடகாவின் சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
எங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்.
கர்நாடகாவின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் தலையிடக் கூடாது.” என தெரிவித்தார்.
இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.