பொய் பாலியல் வழக்கு மிரட்டல்: ரூ.90 லட்சம் பறித்த பெண் எம்பிஏ பட்டதாரி குர்கானில் கைது!

கைது செய்யப்பட்ட பெண் எம்பிஏ பட்டதாரியிடம் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 308 (5)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
false sexual harassment case
Published on: 
Summary

பொய் பாலியல் புகாரில் சிக்க வைப்பதாகவும், குடும்பத்தினருக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் மிரட்டி, வாலிபர் ஒருவரிடமிருந்து சுமார் ரூ.90 லட்சம் வரை பறித்த 24 வயது பெண் எம்பிஏ பட்டதாரியை குர்கான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சூர்யதிதா தாஸ் என்ற அந்தப் பெண், குர்கானில் உள்ள சுஷாந்த் லோக் பகுதியில் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான அங்கித் அகர்வால் என்பவருடன் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் செயலி மூலமாக இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இணைய வழியில் உரையாடி வந்த இவர்கள், பின்னர் தொலைபேசி எண்களைப் பகிர்ந்து நேரில் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

ரூ.90 லட்சம் வரை பறிப்பு

பழக்கம் தீவிரமடைந்த நிலையில், சூர்யதிதா தாஸ் அந்த வாலிபரை மிரட்டத் தொடங்கியுள்ளார். தன் கோரிக்கைகளுக்கு பணம் தராவிட்டால் பொய் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய வைப்பேன் என்றும், குடும்பத்தினரை அழித்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அச்சமடைந்த அங்கித் அகர்வால், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கமாக சிறுக சிறுக இதுவரை சுமார் ரூ.90 லட்சம் வரை கொடுத்துள்ளார். இருப்பினும், அப்பெண்ணின் பண ஆசை தீராமல் தொடர்ந்து மிரட்டி கூடுதல் பணம் கேட்டுள்ளார்.

தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கித் அகர்வால், அக்டோபர் 4 அன்று குர்கானில் உள்ள சாதர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கிய காவல் துறையினர், அப்பெண்ணை கையும் களவுமாகப் பிடிக்க வியூகம் வகுத்தனர். திட்டமிட்டபடி, பணத்தைப் பெற்றுக்கொள்ள சோஹ்னா சாலையில் உள்ள ஒரு காபி கடையில் சந்திக்குமாறு அங்கித் அகர்வாலை சூர்யதிதா தாஸ் வரவழைத்துள்ளார்.

அப்போது, காவல் துறையினர் அடையாளக் குறியீடுகள் மற்றும் கையெழுத்திடப்பட்ட ரூபாய் நோட்டுகளை அங்கித் அகர்வாலிடம் கொடுத்து அனுப்பினர். சாதாரண உடையில் காபி கடையில் மறைந்திருந்து கண்காணித்த தனிப்படை போலீசார், ரூ. 50,000 ரொக்க பணத்தை அங்கித் அகர்வாலிடமிருந்து சூர்யதிதா தாஸ் வாங்கியபோது அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

ரூ.95 லட்சம் வங்கி கணக்கு முடக்கம்

கைது செய்யப்பட்ட சூர்யதிதா தாஸிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 308 (5)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்த சுமார் ரூ.95 லட்சம் தொகையையும் காவல் துறையினர் முடக்கியுள்ளனர். அக்டோபர் 4 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்பெண்ணை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com