இது என் மாநிலம்.. தமிழகத்தின் எதிர்ப்பை பற்றிக் கவலைப்படவில்லை - 'மேகதாது' பற்றி டிகே சிவகுமார்

தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள 177 டிஎம்சி நீர் உறுதி என்று சிவகுமார் கூறினார்.
 மாணிக்கம் தாகூர், டிகே சிவகுமார்
Published on: 
Summary

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்வொன்றில் பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி மேகதாது கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் அதை எதிர்த்து வருகிறது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் சிவகுமார் கூறிய இந்தக் கருத்தை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்தார்.

மாணிக்கம் தாகூர் என்ன சொன்னார்?

மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டின் கருத்தையும் ஒப்புதலையும் பெறாமல் கர்நாடகா இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

மேலும், இந்தத் திட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவையும் மீறுவதாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த அணையின் கட்டுமானம் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் தாகூர் தாகூர் சுட்டிக்காட்டினார்.

சிவகுமார் சொன்னது என்ன?

இந்நிலையில் விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை என்றும், அணையைக் கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு உரிமை உண்டு என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

"இது என் மாநிலம், இது என் உரிமை, என்னை யார் விமர்சித்தாலும் எனக்குக் கவலையில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக என யார் எதிர்த்தாலும் தனது நிலைப்பாடு மாறாது என்றும், அனைவரும் நாட்டின் சட்டங்களையும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டம் நன்மை பயக்கும் என்பதைத் தமிழகத்திற்கு நேரடியாக எடுத்துரைக்க தயாராக இருப்பதாகவும் சிவகுமார் கூறினார்.

மாணிக்கம் தாகூர் மற்றும் பிற தமிழகத் தலைவர்களை ஒரு தூதுக்குழுவுடன் கர்நாடகாவிற்கு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அணை கட்டப்படவுள்ள இடத்திற்கு அவர்கள் சென்றால், இந்தத் திட்டத்தின் நன்மைகளை விளக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மேகதாது - கர்நாடகாவின் வாதம்

மேகதாது அணை, காவேரியில் உள்ள உபரி நீரைச் சேமித்து, நீரோட்டத்தை கட்டுப்படுத்த உதவும் என்பதே கர்நாடகாவின் வாதம்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள 177 டிஎம்சி நீர் கிடைப்பதை அது உறுதி செய்யும் என்று சிவகுமார் கூறினார்.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் நீர்ப் பங்கீட்டைப் பாதிக்காது என்றும், கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கே அதிகப் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

X