

பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவோ, அதனைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளைக் கடைப்பிடிக்கவோ முடியாது என, தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “வளர்ச்சிக்கான மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்று பயங்கரவாதம்” எனவும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது;
“பயங்கரவாதம் என்பது அப்பாவி உயிர்களைப் பறிப்பதுடன், முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. அதை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து ஆதரவளிப்பவர்களுக்கும், அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடம் வழங்குபவர்களுக்கும் இடமிருக்கக்கூடாது.
பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த சூழலமைப்பும் வலுவாகவும், கூட்டாகவும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த உரையின்போது, பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தாரும் உடனிருந்தார்.
தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் அக்.19 மற்றும் 20 என இருநாட்கள் இந்த அமைப்பின் 25-வது கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.
துஷான்பே சென்ற ராஜ்நாத் சிங்கிற்கு அந்நாட்டின் சம்பிரதாய வரவேற்பும் அளிக்கப்பட்டது. அவரை தஜிகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் எமோமாலி சோபிர்சோடா மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஷெராலி ஜோனான் ஆகியோர் வரவேற்றனர்.