தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!

முகமறியா அவர்களே பலரின் உயிரைக் காப்பாற்றிய, காப்பாற்றி வரும் தேவதைகள்.
லட்சுமி நரசம்மா
லட்சுமி நரசம்மா
Published on
Summary

உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று, தற்கொலை தடுப்பு மையத்தில் பணியாற்றும் லட்சுமி நரசம்மா என்ற தேவதை பற்றி காண்போம்.

இன்று (செப்டம்பர் 10) உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இத்தினத்தின் கருப்பொருள் "தற்கொலை பற்றிய கருத்தாக்கத்தை மாற்றுவோம்", "தற்கொலை பற்றிய உரையாடலைத் தொடங்குவோம்" என்பவையாகும்.

உலகளவில், குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் தற்கொலைகள் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இந்தியாவில் அண்மைக் காலமாக அதிகம் காணப்படுகிறது.

எனவே தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற விழிப்புணர்வு தற்காலத்தில் வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.

தற்கொலைகளின் மூல காரணம்

பெரும்பாலான தற்கொலைகள், குறிப்பாக இளைஞர்களின் தற்கொலைகளில் உள்ள பொதுவான விஷயம், அவர்கள் அந்த கணத்தில் தங்களின் பிரச்னையை கேட்பார் யாரும் இல்லை, நாம் உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று நினைப்பது தான்.

அவர்களின் இந்த எண்ணத்தை போக்க, அவர்களின் பிரச்சனையை முன்னறிந்து கேட்பது அவசியம். அவர்களே சில நேரம் யாரிடமாவது பேசினால் மன ஆறுதல் பெறலாம் என நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சூழல் வாய்க்காமல் போவதும் தற்கொலைகள் நிகழ காரணம்.

குரல்கள்

அவ்வாறானவர்களிடம் அவர்களின் பிரச்னையை கேட்டறிந்து ஆறுதல் சொல்ல ஆலோசனை அளிக்க அரசு சார்பிலும், தன்னார்வ நிறுவனங்கள் சார்பிலும் தற்கொலை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் வாயிலாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு தாங்கள் அழைத்துப் பேசும்போது மறுமுனையில் இருந்து ஆறுதலாக பேசுபர்களின் குரல்களை மட்டுமே தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் கேட்டிருப்பார்கள்.

பின்னொரு கணத்தில் அந்த குரலே தங்களை தங்கள் வாழ்வின் இக்கட்டான கணத்தில் தாங்கள் எடுக்கவிருந்த விபரீத முடிவில் இருந்து காத்திருக்கின்றன என்பதை பலர் உணரலாம்.

ஆனால் அந்த குரல்கள் யாருடைவை, அவர்கள் எவ்வாறான வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பது பெரும்பாலும் சிந்திக்கப்படுவதில்லை. ஆனால் முகமறியா அவர்களே பலரின் உயிரைக் காப்பாற்றிய, காப்பாற்றி வரும் தேவதைகள்.

அப்படியான ஒரு தேவதையே ஐதராபாத்தை சேர்ந்த 55 வயதான லட்சுமி நரசம்மா.

பலரது வாழ்வை தற்கொலையில் இருந்து காத்துள்ள லட்சுமியின் சொந்த வாழ்க்கையே, வாழ்வின் கஷ்டங்களை எப்படி கடந்து வருவது என்ற படிப்பினையை வழங்குவதாக விளங்குகிறது.

லட்சுமி நரசம்மாவின் கதை

லட்சுமி நரசம்மா தனது 20வது வயதிலிருந்தே Rheumatoid Arthritis எனும் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

நோயின் தீவிரத்தால் 10 ஆண்டுகளாக உடல் செயலிழப்பு ஏற்பட்டு நடக்கவும் முடியாத நிலையில் வாழ்ந்து வரும் லட்சுமி நரசம்மா, தங்கள் வாழ்வில் ஒரு குறுகிய புள்ளியில் முடங்கி விபரீத முடிவை எட்டுபவர்களை ஆற்றுப்படுத்தி அவர்களின் வாழ்வை முன்னோக்கி நகர்த்த உதவுகிறார்.

கடந்த 2024 வரை லட்சமியும் ஒரு வித மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தபோதோலும் தனது பக்கத்து வீட்டுக்காரர் அளித்த ஊக்கத்தினால் தன்னார்வ ஆலோசகராகப் பயிற்சி பெற்றார்.

தற்கொலை தடுப்பு உதவி மையமான '1Life' எண்களைத் தொடர்பு கொண்டு மன உளைச்சலில் பேசுபவர்கள் பலருக்கு, மறுமுனையில் தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் 55 வயதான லட்சுமி நரசம்மா கடந்த 10 ஆண்டுகளாக நடக்கக்கூட முடியாமல் முடங்கியுள்ளார் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உயிர் காக்கும் தேவதை

"மற்றவர்களின் துன்பங்களைக் கேட்கும்போது என் சொந்த வலி மிகவும் சிறியதாகத் தோன்றுகிறது. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்து மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிகிறார்கள், அந்த எண்ணத்திற்குத் தடை போடுவதே எங்கள் வேலை. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு." என கூறுகிறார் நரசம்மா.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பேசி லட்சுமி நரசம்மா பல உயிர்களை காத்துள்ளார்.

வேலை கிடைக்காததாலும், காதலித்த பெண்ணை மணக்க குடும்பத்தினர் எதிர்த்ததாலும் மன அழுத்தத்தில் இருந்த இளைஞருக்கு நம்பிக்கையளித்து, தோல்வி என்பது தற்காலிகமானது எனப் புரியவைத்து வாழ்வின் மீதான விருப்பத்தை மீட்டுத் தந்துள்ளார்.

தொழில் தோல்வியால் குடும்பத்தாரால் மதிக்கப்படவில்லை என எண்ணி தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்ட நபருக்கு, சிறுகச் சிறுக மீண்டும் ஒரு புதிய வேலையை தொடங்கி வாழ்க்கையை மீட்டெடுக்க வழிகாட்டியுள்ளார்.

இவ்வாறாக, விவசாயியான கணவர் மற்றும் பிள்ளைகளின் உறுதியான ஆதரவோடு, லட்சுமி நரசம்மா இன்று நூற்றுக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் முகவரியாக செயல்பட்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com