'போராட்டம் தொடர்கிறது': சரத் பவாரைச் சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி

'இந்தியா' கூட்டணிக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
File Pic: ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on: 

தொகுதி மறுவரையறை மசோதாவை (delimitation bill) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி ஆதரிப்போம் என்று அறிவித்துள்ள சூழலில், 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் குழு ஒன்று, தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் என்.சி.பி. (எஸ்பி) தலைவர் சரத் பவாரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சந்தித்தது.

சந்திப்புக்கு பிறகு, டெல்லிக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "போராட்டம் தொடர்கிறது. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என்று கூறினார்.

பேசாமல் புறப்பட்டு சென்றனர்:

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், "நாங்கள் எங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளோம். அவர் (பவார்) இதை புரிந்துகொண்டிருப்பார் என்றும், எங்களுக்கு ஆதரவளிப்பார் என்றும் நம்புகிறேன். தேசத்தின் நலனே எப்போதும் முதன்மையானது.

அவர் எப்போதும் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து நின்றவர். 'இந்தியா' கூட்டணிக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்

நீரிழப்பு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயதான சரத் பவாரை சந்தித்த பிறகு, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள், வெளியே காத்திருந்த ஊடகத்தினரிடம் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ஆதரிக்க வேண்டாம்:

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, ராகுல் காந்தியும் பிற தலைவர்களும் சரத் பவாரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது சுப்ரியா சுலே அங்கு இல்லை என்றும், ஆனால் அவரது மகளும் மருமகனும் சரத் பவாருடன் இருந்தனர் என்றும் அவர் கூறினார்.

"தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் 'இந்தியா' கூட்டணியின் முடிவுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் சரத் பவாரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு சரத் பவார், இது குறித்து ஆலோசிப்பதாகக் கூறினார்" என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

X