

சத்தீஸ்கரில் இருந்து பட்டாலியன் ஒன்றை திரும்பப்பெற்ற சிஆர்பிஎப் அந்த வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட தனது பட்டாலியனை மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) திரும்பப் பெற்றுள்ளது. அந்த பட்டாலியன் தற்போது மணிப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நாட்டில் நக்சலிசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக மத்திய அரசு அறிவித்த பின்னர், நக்சல் ஒழிப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப், ஒரு முழு பட்டாலியனைத் திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
சி.ஆர்.பி.எப் நீண்ட காலமாக நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்தப் பணிக்காக 100,000க்கும் மேற்பட்ட வீரர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப்-இன் 25-க்கும் மேற்பட்ட சாதாரண மற்றும் கோப்ரா பட்டாலியன்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
தற்போது திரும்பபெறப்பட்ட இந்த பட்டாலியன் , முன்னர் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்ட சத்தீஸ்கரின் தெற்கு பஸ்தர் பகுதியிலுள்ள சுக்மா மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
மார்ச் மாதத்திற்குப் பிறகு அதன் பொறுப்புகள் மாற்றப்பட்டன. அதன் வீரர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும், மேம்படுத்தப்பட்ட ஐஇடி வெடிபொருட்களை செயலிழக்கச் செய்வதற்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் அந்த பட்டாலியன் மணிப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த முடிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார். நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு அமைப்பில் பட்டாலியன் விலகுவது வெற்றிடத்தை உருவாக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
மே 2023ல் மணிப்பூரில் குக்கி - மெய்தேய் இன மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. அன்று முதல் அங்கு அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு, சிஆர்பிஎப்-இன் சிறப்பு பிரிவான, இரண்டு கோப்ரா கமாண்டோ பட்டாலியன்கள் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டன.
மேலும், மற்ற வழக்கமான சிஆர்பிஎப் பிரிவுகள் மற்றும் விரைவு அதிரடிப் படையும் (ஆர்ஏஎப்) அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.