டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!

இந்த டெண்டர் வெளியானபோது சத்யேந்தர் ஜெயின் சிறையில் இருந்தார்.
டெண்டர் மோசடி வழக்கு - ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைது!
Published on

டெல்லி குடிநீர் வாரிய டெண்டர் ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய், முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா, ஏஎன் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நாகேந்திர யாதவ், யூரோடெக் என்விரான்மென்ட் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் ராஜா குமார் குர்ரா மற்றும் ஸ்ரீஜன்ஹார் உரிமையாளர் பங்கஜ் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.1.52 கோடி லஞ்சம் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக டெண்டர் நிபந்தனைகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையால் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சத்யேந்தர் ஜெயினின் கைதைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளைக் குறிவைக்க, பாஜக பொய்க் குற்றச்சாட்டுகளையும், கைது நடவடிக்கையையும் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“பாஜக ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறது என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் தேவை? அந்த குடிநீர் வாரிய டெண்டர் விடப்பட்ட நேரத்தில், சத்யேந்திரா சிறையில் இருந்தார். சிறையிலிருந்து அவர் எப்படி பொறுப்பேற்றார்?

உண்மையான காரணம் என்னவென்றால், சத்யேந்திர ஜெயின் பஞ்சாபின் ஆம் ஆத்மி இணைப் பொறுப்பாளராக இருக்கிறார், மேலும் அங்கு தேர்தல்கள் வரவிருக்கின்றன.” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com