

அரியானாவில் உள்ள பள்ளி ஒன்று தற்போதைய காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மிகவும் அவசியமான நல்ல தொடுதல் (Good touch) மற்றும் தவறான தொடுதல் (Bad touch) ஆகியவற்றை மிக எளிமையான முறையில் கற்றுக்கொடுக்கும் காணொளி இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
அரியானா மாநிலம் யமுனா நகரில் உள்ள லே டாஃபோடில்ஸ் ப்ளேஸ்கூல் ஒன்று தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதுகுறித்து ப்ளேஸ்கூல் தனியார் பள்ளியின் முதல்வர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில், பெண் குழந்தை ஒன்று தனது கையில் நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் என இரண்டு பதாகைகளை வைத்துள்ளது.
அப்போது ஆசிரியை ஒருவர் தனது கையில் குச்சி ஒன்றை வைத்து கொண்டு, முதலில் அந்த பெண் குழந்தையின் கன்னத்தில் தொடுகிறார்.
இதையடுத்து அந்த குழந்தை, தனது கையில் வைத்திருந்த நல்ல தொடுதல் என்ற பதாகையை உயர்த்தி காண்பிக்கிறது.
பின்னர் ஆசிரியை, குழந்தையின் தலை மற்றும் கையை தொடும்போது, நல்ல தொடுதல் என்ற பதாகையை குழந்தை மீண்டும் உயர்த்துகிறது.
இதைத்தொடர்ந்து ஆசிரியை குழந்தையின் மார்பு பகுதி, இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி மற்றும் பின்புறம் ஆகிய உடல் பாகங்களை தொடும்போது, அந்த குழந்தை தான் அசெளகரியத்தை உணர்வதாக கூறி, தவறான தொடுதல் பதாகையை உயர்த்தி காண்பிக்கிறது.
இதையடுத்து பள்ளியின் முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த காணொளி பயனர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த முன்னெடுப்பை எடுத்த ஆசிரியைகள் பயனர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
மேலும் இந்த காணொளி குழந்தைகளின் சம்மதம், அவர்களின் உடல்ரீதியான அசெளகரியம் ஆகியவற்றை எளிமையான முறையில் கற்றுத்தருவதாக பயனர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.