எனக்கு சம்பள உயர்வு வேண்டாம் - டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்

புதிய தொழில்களில் நஷ்டத்தைக் குறைத்து பணப்புழக்கத்தை சீராக்க புதிய விமானங்கள் வாங்குவதைத் தள்ளிப்போடவும், லாபமில்லாத வழித்தடங்களை ரத்து செய்வதற்கும் சந்திரசேகரன் முடிவு.
Chandrasekaran
Published on

டாடா குழுமத்தின் புதிய வணிகங்களின் நிதி நெருக்கடி மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடுமையான நஷ்டம் காரணமாக, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் நடப்பு நிதியாண்டிற்கான தனது சம்பள உயர்வை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் சந்திரசேகரன் மொத்தம் ரூ. 155.8 கோடி ஊதியமாகப் பெற்றார். இதில் ரூ. 15.1 கோடி அடிப்படைச் சம்பளமாகவும், ரூ. 140.7 கோடி லாப அடிப்படையிலான கமிஷனாகவும் இருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் (ஜூன் 12) நடைபெற்ற டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில், இந்த ஆண்டு தனக்கு சம்பள உயர்வு தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் பெரு நஷ்டம்..

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 26,800 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிய 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வருடாந்திர நஷ்டம் இதுவாக கருதப்படுகிறது.

நோயல் டாடா கேள்வி - சந்திரசேகரனின் 3 ஆண்டு திட்டம்..

மும்பை பாம்பே ஹவுஸில் ஜூன் 12 அன்று சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற டாடா சன்ஸ் போர்டு கூட்டத்தில் டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா மற்றும் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 6 முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஏர் இந்தியாவின் அதிகப்படியான மூலதன நுகர்வு குறித்து கேள்வி எழுப்பிய நோயல் டாடா, நஷ்டத்தைக் குறைக்க உரிய திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரனை வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சந்திரசேகரன் 3 ஆண்டுகால மீட்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்படி, புதிய விமானங்கள் வாங்குவதைத் தள்ளிப்போடுதல், லாபமில்லாத வழித்தடங்களை ரத்து செய்தல் மற்றும் பணப்புழக்கத்தை சீராக்க கடற்படை விரிவாக்க உத்திகளை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிறப்பான வளர்ச்சியை நோயல் டாடா இக்கூட்டத்தில் பாராட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com