டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் ராஜினாமா: மீண்டும் தலைவராக தொடர விரும்பவில்லை என அறிவிப்பு!

தனது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள என்.சந்திரசேகரன், டாடா குழுமத்தில் தனது 40 ஆண்டுகால தொழில்முறை பயணத்தை நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
N.Chandrasekaran
Published on

டாடா குழுமத்தின் முதன்மை நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், தனது பதவிக் காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் அப்பதவியில் தொடர விரும்பவில்லை எனத் தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவிருக்கும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சார் டோரப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை சந்திரசேகரனின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாக பரிந்துரை செய்தன. ஆனால், கடந்த பிப்ரவரி 24 அன்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்மானத்திற்கு, குழுவின் உறுப்பினர் ஒருவர் (நோயல் டாடா என அறிக்கைகள் தெரிவிக்கின்றன) எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  

நிர்வாகக் குழுவில் முழுமையான ஆதரவு இல்லாத காரணத்தால், இந்த முடிவை சந்திரசேகரன் ஒத்திவைத்தார். கடந்த ஆறு மாதங்களாக இதில் எவ்வித தெளிவான முடிவும் எட்டப்படாத நிலையிலும், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர் இந்தப் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

சந்திரசேகரனின் அதிகாரப்பூர்வ அறிக்கை

தனது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள என்.சந்திரசேகரன், டாடா குழுமத்தில் தனது 40 ஆண்டுகால தொழில்முறை பயணத்தை நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். "டாடா குழுமத்தில் பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. இருப்பினும், 2027 பிப்ரவரி 20 அன்று எனது தற்போதைய பதவிக் காலம் முடிவவடையும் போது, மீண்டும் தலைவர் பதவிக்கு என்னைப் பரிசீலிக்க வேண்டாம் என்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவிடம் தெரிவித்துவிட்டேன். நிறுவனப் பணிகளில் தடங்கலின்றி சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய, புதிய தலைவரை நிர்வாகக் குழு விரைவில் தேர்வு செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார்.  

சந்தையில் ஏற்பட்ட தாக்கம்

இந்த எதிர்பாராத ராஜினாமா செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்தன. குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு விலை சுமார் 4 சதவீதம் வரை சரிந்தது. மேலும் டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகளும் சரிவைக் கண்டன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com