‘புஷ்பா’ பட பாணியில் வேனில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தல்- வாலிபர் சிக்கினார்

திருப்பதி அருகே ‘புஷ்பா’ பட பாணியில் தக்காளி டிரேக்களுக்கு அடியில் செம்மரங்கள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரம்.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரம்.
Published on

திருப்பதி:

சந்திரகிரி போலீசார் மூலபள்ளி சுற்றுப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து ஒரு வேன் வேகமாக வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்த வேன் டிரைவர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி தப்பிக்க முயன்றார்.

இதனால் போலீசார் வேனை துரத்தி சென்றனர். போலீசார் அந்த வாகனத்தை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்திய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகே உள்ள சாலையோர புதரில் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரகசிய அறையில் தக்காளி டிரேக்களுக்கு அடியில் 14 செம்மரங்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த வாலிபரை கைது செய்தனர்.

இந்த செம்மரங்கள் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் வேனில் தக்காளிகளுக்கு இடையில் மற்றும் பால் வேனில் ரகசிய அறை அமைத்து செம்மரங்களை கடத்தி செல்வார்கள்.

அதே பாணியில் இப்போது தக்காளி டிரேக்களுக்கு அடியில் செம்மரங்களை கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com