திருவனந்தபுரம் ராஜ் பவன் மாளிகையில் அரிய வகை பசுக்களை வளர்த்து பராமரிக்கும் கேரள கவர்னர்

திருவனந்தபுரம் கவர்னர் மாளிகை வளாகத்தில் ஏராளமான இடம் காலியாக உள்ளது. அவற்றை முறையாக பயன்படுத்த நினைத்து, கவர்னர் இங்கு பண்ணை அமைத்துள்ளார்.
பசுக்களுடன் பாசமாக பழகும் கவர்னர் ஆரிப்முகமதுகான்
பசுக்களுடன் பாசமாக பழகும் கவர்னர் ஆரிப்முகமதுகான்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகான்.

இவர் மாநில விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக இவர் தெரிவித்த கருத்துக்கள் மாநிலத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும் மோதல் நிகழ்ந்து வருகிறது.

அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நடந்து கொள்ளும் கவர்னர், கால்நடைகளிடம் மிகுந்த அன்பு காட்டி வருகிறார். இதற்காக திருவனந்தபுரத்தில் அவர் தங்கி உள்ள கவர்னர் மாளிகையில் கால்நடை பண்ணை ஒன்றையும் தொடங்கி உள்ளார்.

இந்த பண்ணையில் ஆடு, மாடுகள் மற்றும் சேவல் போன்ற வீட்டு வளர்ப்பு பறவைகளையும் வளர்த்து வருகிறார். பசுமையான சூழலில் அமைந்துள்ள இந்த பண்ணையில் அரிய வகை 2 வச்சூர் பசுக்களை வளர்த்து வருகிறார்.

இந்த வகை மாடுகள் அதிக பால் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் 10 ஆடுகளும் இங்கு வளர்க்கப்படுகிறது.இவற்றை கவர்னர் ஆரிப் முகமது கான் அவரது சொந்த ஆர்வத்தில் வளர்த்து வருகிறார்.அரசு அலுவலங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் காரணமாக மிகவும் பரபரப்பாக இயங்கும் ஆரிப் முகமது கான் நேரம் கிடைத்தால் பண்ணைக்கு சென்று கால்நடைகளுடன் நேரத்தை செலவிடுகிறார்.

பண்ணையில் உள்ள பசுக்கள், ஆடு, மாடுகளின் முதுகை பாசமாக தடவி கொடுத்து அவற்றுடன் நேரம் செலவிடுகிறார். இதுகுறித்த காணொளி காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பரவியது.இதற்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறும்போது, கவர்னர் மாளிகை வளாகத்தில் ஏராளமான இடம் காலியாக உள்ளது. அவற்றை முறையாக பயன்படுத்த நினைத்து, கவர்னர் இங்கு பண்ணை அமைத்துள்ளார். மேலும் கவர்னர் மாளிகையில் தங்கியுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வெளியில் இருந்து பால் வாங்கப்படுகிறது.

எனவே கவர்னர் மாளிகை ஊழியர்களின் பால் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் முதல் கட்டமாக பசுமாடுகளை வளர்த்து பராமரிக்கிறார் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com