நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் செல்போன்கள் கோர்ட்டில் இன்று ஒப்படைப்பு

நடிகை கடத்தல் வழக்கில் இன்று காலை கேரள ஐகோர்ட்டு பதிவாளர் முன்பு திலீப்பின் வக்கீல்கள் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் திலீப்பின் செல்போனையும் அவரிடம் சமர்ப்பித்தனர்.
நடிகர் திலீப்
நடிகர் திலீப்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் கைது செய்தனர். கைதான திலீப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரிகளை நடிகர் திலீப் மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க நடிகர் திலீப் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார். அதனை விசாரித்த கோர்ட்டு, திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, போலீசார் நடிகர் திலீப், அவரது உறவினர்களிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போது நடிகர் திலீப் பயன்படுத்திய செல்போன்களை தருமாறு கேட்டனர். ஆனால் அவர், அவற்றை கொடுக்க மறுத்தார்.

செல்போன்களை விசாரணைக்கு தர மறுத்தது பற்றி போலீசார் ஐகோர்ட்டில் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் திலீப் தனது செல்போன்களை ஐகோர்ட்டில் இன்று ஒப்படைக்க வேண்டு மென்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதுபற்றி திலீப்பின் வக்கீல் கூறும்போது, இன்று செல்போன்களை கோர்ட்டில் ஒப்படைப்போம் என்று கூறினார்.

அதன்படி, இன்று காலை கேரள ஐகோர்ட்டு பதிவாளர் முன்பு திலீப்பின் வக்கீல்கள் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் திலீப்பின் செல்போனையும் அவரிடம் சமர்ப்பித்தனர்.

ஒப்படைக்கப்பட்ட செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு கேட்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு செல்போன்கள் கிடைத்ததும், அதனை போலீசார் தடயவியல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சோதனையின்போது, வழக்கு தொடர்பான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com