வேலை தேடிச்சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- ஓராண்டாக கற்பழித்த 15 பேர்

கேரளாவில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை ஏமாற்றி ஓராண்டாக கற்பழித்த 15 பேரில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கேரள மாநிலம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார்.

வயிற்று வலி இருப்பதாக கூறிய சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. திருமணமாகாமல் 17 வயதே ஆன சிறுமி கர்ப்பம் ஆகி இருந்ததால், டாக்டர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கியதோடு, சம்பவம் குறித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தாயாரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சிறுமி தாயாருடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் குடும்பத்தை பாதுகாக்க சிறுமி வேலைக்குச் செல்ல விரும்பினார். இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வேலை கேட்டு சென்றார்.

வேலை தருவதாக கூறிய சிலர் சிறுமியை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். கடந்த ஓராண்டாக சிறுமி இது போன்ற சித்ரவதையை அனுபவித்தார். 15-க்கும் மேற்பட்டோர் சிறுமியை சீரழித்துள்ளனர்.

இதில் சிறுமி கர்ப்பமானார். இதனால் ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றது குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் தொடுபுழா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தேடி வந்தனர்.

இதில் தொடுபுழாவைச் சேர்ந்த தங்கச்சன், கூடக்குளத்தைச் சேர்ந்த சாக்கோ, எடவெட்டி பினு, வெள்ளரம் குன்னு சஜிவ், ராமபுரத்தைச் சேர்ந்த இன்னொரு தங்கச்சன், பெருந்தல மன்னாவைச் சேர்ந்த ஜான்சன் ஆகிய 6 பேர் சிறுமியை கற்பழித்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களுடன் மேலும் சிலர் சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com