மிக இளம் வயதில் மாவட்ட கலெக்டர்: மணிப்பூரில் தமிழ் பெண் சாதனை

2022-ஆம் ஆண்டு நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் தேர்வில் 338-வது இடம் பிடித்தார்.
ஏஞ்சலின் ரெனிட்டா
ஏஞ்சலின் ரெனிட்டா
Published on

மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட கலெக்டராக (துணைக் கமிஷனர்) தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது மாவட்ட கலெக்டர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழியில் படித்து சாதனை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 28). இவர் தனது பள்ளி படிப்பை தமிழ் வழி கல்வியில் பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பிரிவில் படித்து தங்க பதக்கம் வென்று அசத்தினார்.

முதலாவது முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்.

சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ஏஞ்சலின் ரெனிட்டா, இதற்காக கடுமையாக உழைத்து படித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் தேர்வில், தனது முதலாவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். இதையடுத்து அவர் மணிப்பூர் மாநில கேடருக்கு தேர்வு செய்யப்பட்டு அங்கு தனது பணியை தொடங்கினார்.

குவியும் வாழ்த்து

மணிப்பூரில் உள்நாட்டு துறை இணை செயலாளர், லம்பேல் துணைப் பிரிவு அதிகாரி மற்றும் மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் ஏஞ்சலின் ரெனிட்டா திறம்பட பணியாற்றினார். அவரது சிறப்பான நிர்வாக திறமையை பாராட்டி, மணிப்பூர் அரசு தற்போது அவரை காக்சிங் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்து, மிக இளம் வயதிலேயே மணிப்பூரின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மண் பெற்றெடுத்த இந்த 'தமிழச்சிக்கு' சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com