

முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன.
18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கட்டாய அனுமதியை நடைமுறைப்படுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872-ன் படி, 18 வயதுக்குட்பட்ட நபர்கள் சட்டரீதியாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபட முடியாது. இருப்பினும், முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன. இது இந்திய சட்டவிதிகளுக்கு முரணாக அமைவதோடு, சிறார்களின் தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்கும் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
சிறார்கள் தவறான தகவல்களை வழங்கி சமூக வலைதளங்களில் நுழைவதைத் தடுக்க, மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்கும் (e-KYC) கடுமையான கட்டுப்பாட்டு அமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் சரிபார்க்கப்பட்ட அனுமதி இல்லாமல் சிறார்களுக்குச் சொந்தமான கணக்குகளைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு மட்டுமே பெற்றோர் கட்டுப்பாட்டில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டால் சிறார்கள் இணையவழி சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், இணையவழி அச்சுறுத்தல் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என மனுதாரர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்தியாவில் சிறார்களின் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அவர்களைப் பாதுகாக்கவும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் தகுந்த திருத்தங்களை மேற்கொண்டு அல்லது புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.