மும்மொழிக் கொள்கையில் இருந்து 6ம் வகுப்புக்கு விலக்கு அளியுங்கள்..! சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

1.2 சதவீத பள்ளிகளில் மட்டும் தான் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன.
Supreme court
Published on: 

மும்மொழிக் கொள்கையில் இருந்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ.க்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுத்தேர்வு கிடையாது

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 மொழிகள் படிப்பது கட்டாயம் என்றும், இந்த உத்தரவு ஜூலை 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் சி.பி.எஸ்.இ. கடந்த மே மாதம் அறிவித்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும், கல்வியாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதைத்தொடர்ந்து, தற்போது 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10-ம் வகுப்புக்கு செல்லும்போது அவர்களுக்கு 3-வது மொழிக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்றும், பள்ளி அளவிலேயே 3-வது மொழித்திறன் மதிப்பீடு செய்யப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. கூறியது.

தள்ளி வைக்கலாம்

கடந்த 17-ந் தேதி, இவ்வழக்கு விசாரணையின்போது, 6-ம் வகுப்பு மாணவர்களுக் கான மும்மொழி கொள்கை திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டுக்கு தள்ளிவைப்பது பற்றி பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ.யை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி ஜோய்மால்யா பக்சி கூறியதாவது:-

தற்போது 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமலாக்கத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கலாம். இதனால், கூடுதலாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், பாடப்புத்தகங்களை ஏற்பாடு செய்யவும் பள்ளிகளுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு எதிர்ப்பு

ஆனால், மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அதை ஏற்கவில்லை.

அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் சுமார் 28 ஆயிரம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சுமார் 99 சதவீத பள்ளிகள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்குத் தேவையான வசதிகளையும், பாடப்புத்தகங்களையும் வைத்துள்ளன.

1.2 சதவீத பள்ளிகளில் மட்டும் தான் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன.

விரும்பவில்லை

எனவே, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் விலக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை.

அத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே அமல்படுத்தப்படும். மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், "மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் சிரமங்களை சந்திக்கும் பள்ளிகள் மற்றும் மனுதாரர்களுடன் பேச உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்கலாம்” என்று யோசனை தெரிவித்தார்.

சமஸ்கிருதம்

அதற்கு மனுதாரர்களில் ஒருவரின் வக்கீல் கோபால் சங்கரநாராயணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

இன்னொரு குழு தேவையில்லை. தெளிவான முடிவுதான் தேவை. எங்கள் எதிர்ப்பு, வெறுமனே மும்மொழி கொள்கை அமலாக்கத்துக்கு அல்ல.

மொழி விருப்பத்தேர்வை மாற்றுவதைத்தான் எதிர்க்கிறோம். உதாரணமாக, மனுதாரரின் பள்ளியில் மாணவர் கள் 4-ம் வகுப்பில் இருந்து ஸ்பானிஷ் மொழி படித்து வந்தனர். அவர்கள் சமஸ்கிரு தத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

6-ம் வகுப்புக்கு விலக்கு

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

99 சதவீத சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதாகவும், தேவையான வசதிகள் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

அதன் அடிப்படையில், 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது போல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதே விலக்கை நடப்பு கல்வி ஆண்டில் அளிப்பது பற்றி பரிசீலிக்குமாறு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சி.பி.எஸ்.இ. தனது பதில் மனுவை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com