

மகாராஷ்டிராவில் பள்ளி வளாகத்திற்கு அருகில் சில திண்பண்டங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பள்ளியில் வடா பாவ் விற்பனை கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவிடம் பள்ளி சிறுவன் ஒருவன் கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பள்ளி குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி வளாகங்களிலும்,
அவற்றிலிருந்து 50 மீட்டர் சுற்றளவிலும் துரித உணவுகளை விற்பனை செய்வதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் அம்மாநில உணவு மற்றும் மருந்து நிராவாகம் தடை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வடா பாவ், சமோசா, எண்ணெயில் பொரித்த உணவுகள், சிப்ஸ், குளிர்பானங்கள், சர்க்கரை பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற திண்பண்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஆண்டு தொடக்கத்தில் துகாராம் வெளியிட்ட உத்தரவில், பள்ளி முதல்வர்கள் மற்றும் நிர்வாகம் அதன் அமலாக்கத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
இதை கடைப்பிடிக்க தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், FDA ஆய்வாளர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறை சென்று இணக்கத்தை சரிபார்ப்பார்கள் என்றும் கூறினார்.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி சிற்றுண்டிச்சாலைகளுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் துகாராம் முண்டே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவிடம், பள்ளிகளில் மீண்டும் வடா பாவ் கடைகளை திறக்குமாறு பள்ளி சிறுவன் ஒருவன் கோரிக்கை வைத்துள்ளான்.
இதையடுத்து பள்ளி மாணவனுக்கு அறிவுரை வழங்கிய ஆணையர், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சுவையாக இருந்தாலும், அவை உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என கூறினார்.
மேலும் அவர், உடலுக்கு ஆரோக்கியமான சத்தான உணவை உண்ணும்படியும் மாணவருக்கு அறிவுரை வழங்கினார். இந்த காணொளி காட்சி இணையத்தில் வெளியாகி பாராட்டுகளை பெற்றுள்ளது.