

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்வாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி உணவகத்தில் வாங்கிய உணவை சாப்பிட்ட 12-ஆம் வகுப்பு மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பள்ளி நடத்துநர் மற்றும் நிர்வாகியை விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
12ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு
ஜெய்ப்பூரில் உள்ள மகாராணா பிரதாப்பில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பிரின்ஸ் சோனி என்ற மாணவர் பயின்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த மாணவர், 11 மணியளவில் மதிய உணவு இடைவெளியின் போது, பள்ளி உணவகத்தில் இருந்து கட்லெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவரின் உடல் நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்ட நிலையில், மாணவரின் தந்தையான அமித் சோனி பள்ளிக்கு வந்துள்ளார்.
பின்னர் தனது மகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவரின் உறவினரான ரவிக்குமார் கூறுகையில், “பள்ளி உணவகத்தில் இருந்து கெட்டுப்போன மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள கட்லெட்டை பிரின்ஸ் சாப்பிட்டபோது, அது அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது.
எங்கள் குடும்பத்தினர் காலை சுமார் 11:45 மணியளவில் பள்ளிக்கு வந்து, பிரின்ஸ் இன்னும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படவில்லை என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதற்குப் பதிலாக, நிர்வாகம் எங்கள் குடும்பத்தினரை ஒரு நான்கு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
சுமார் 100 மீட்டர் தொலைவில் மருத்துவ வசதி இருந்தபோதிலும், பள்ளி நிர்வாகம் பிரின்ஸை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. பள்ளியில் போதுமான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளும் இல்லை.
பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஊழியர்கள் மாணவர் மீது பெரும் அலட்சியமாக இருந்துள்ளனர். பிரின்ஸை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ அல்லது 108 ஆம்புலன்ஸை அழைத்திருந்தாலோ அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்று அவர் கூறினார்.
பள்ளி நிர்வாகி கைது
இதையடுத்து பிரின்ஸின் உடலை பிரேத பரிசோதனைக்காக கன்வாடியா மருத்துவமனைக்கு ஜோத்வாரா போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் பேரில் பள்ளி நடத்துநர் அமித் குமாவத் மற்றும் நிர்வாகி ராஜேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.