

ஐதராபாத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் மோதியதில் 26 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மாநிலங்களவை உறுப்பினர் லிங்கமனேனி ரமேஷின் மகனான 21 வயது லிங்கமனேனி சஞ்சுஷ், காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று, மாதப்பூர் பகுதியில் உள்ள தனது பணியிடத்திற்கு அருகே சாலையை கடக்கும்போது கார் மோதியதில், இன்ஆர்பிட் மாலில் உள்ள லைஃப்ஸ்டைல் ஆடைக்கடையில் பணிபுரிந்து வந்த பாரதி முகி உயிரிழந்தார்.
ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனான 21 வயது சஞ்சுஷ்தான் காரை ஓட்டி சென்றவர் என சைபராபாத் பகுதி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாதப்பூர் உதவி காவல் ஆணையர் சி. ஸ்ரீதர் உறுதிப்படுத்தினார். இக்குற்றம் பிணை வழங்கக்கூடியது என்பதாலும், இதற்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையே விதிக்கப்படலாம் என்பதாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
முதல் தகவல் அறிக்கையின்படி, பாரதியும் அவரது சக ஊழியரான 26 வயது பூஜா அசோக் அலோனும், ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில் மதிய உணவுக்காக அருகில் உள்ள ஐடிசி கோஹினூர் பகுதிக்கு சென்றிருந்தனர். அவர்கள் பணி இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பாரதி மாலுக்கு முன்னால் சாலையை கடக்க முயன்றபோது, ஆஸ்டன் மார்ட்டின் (TG-09-G-0666) வாகனம் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் பாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் அவருக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் அதே காரில் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
பின்னர் அவரது தோழி பூஜா, கடை மேலாளர் அஷ்வின் குமாருக்கு தகவல் தெரிவிக்க, அவர் காவல்துறையை அழைத்தார். பாரதி மீது மோதியபோது, கார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும், பொறுப்பற்ற முறையிலும் ஓட்டப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றவியல் கொலைக்கு நிகராகாத, பொறுப்பற்ற அல்லது அலட்சியமான செயலால் மரணத்தை ஏற்படுத்துவது தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 106(1)-ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.