

நவ.30 முதல் டிச.3 வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் மீண்டும் கூட்ட சபாநாயகர்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நவம்பர் 30 அன்று மக்களவையையும், டிசம்பர் 2 அன்று மாநிலங்களவையையும் கூட்ட வேண்டும் என்றும், இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள பணிகளைப் பொறுத்து, டிசம்பர் 3-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையலாம் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஆனால், எந்தெந்த மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
தொகுதி வரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை பாஜக அரசு மீண்டும் கொண்டுவரக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு அவைகளும் முறைப்படி கலைக்கப்படாமல் ஆகஸ்ட் 13 அன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனால் எதிர்வரும் இந்த அமர்வுகள் மழைக்கால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.