

கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெய்யும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். எப்போதாவது முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தொடங்கக்கூடும்.
கடந்த ஆண்டு ஒரு வாரத்துக்கு முன்னதாக மே 24-ந்தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதேபோன்று இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, அதாவது மே 26-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால் கூறியபடி தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. வழக்கத்தைவிட 4 நாட்கள் தாமதமாக நேற்று தொடங்கியது. அதே நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் பருவமழை தொடங்கியதையடுத்து பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மாநிலம் முழுவதும் வருகிற 10-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பருவமழை தொடங்கிய முதல்நாளான நேற்று, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதன்படி அந்த மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.
இன்றைய தினம் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, மலப்புரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
நாளை(7-ந்தேதி) கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, மலப்புரம் திருச்சூர் ஆகிய 7 மாவட்டங்க ளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், மலைப் பகுதிகளில் நிலச்சரிவு, மண் சரிவு மற்றும் சேற்று தழுவல்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு இந்திய வானிலை மையம் கேட்டுக் கொண்டு உள்ளது. அது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் அதைவிட வேகமாக காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.