சொத்தை விற்றதால் ஆத்திரம்: பெற்றோரை வீதியில் வைத்து தடியால் தாக்கிய மகன்கள்- புனேயில் பரபரப்பு

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெற்றோரையே மகன்கள் தடியால் தாக்கிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sons attack parents
Published on
Summary

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நில விற்பனை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், வயதான பெற்றோரையே வீதியில் வைத்து இரண்டு மகன்கள் தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான துகாராம் கிசான் ராவத் என்பவரும், அவரது மனைவி அஞ்சனாவும் வழக்கம்போல் மாலை நேரத்தில் வீதியின் வழியே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த அவர்களின் மகன்களான சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் ஆகியோர், பெற்றோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தனது மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை துகாராம் விற்பனை செய்ததே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. நிலத்தை விற்றதால் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும், பெற்றோரிடம் தகாத வார்த்தைகளால் பேசி, உடனடியாக அந்த நிலப் பரிவர்த்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

விவாதம் முற்றிய நிலையில், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மரத்தடிகளால் பெற்றோர் இருவரையும் மகன்கள் இரக்கமின்றி சரமாரியாகத் தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் துகாராமின் முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் அவரது மனைவி அஞ்சனாவுக்கு மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்த தம்பதிய மீட்டெடுத்து, சிகிச்சைக்காக இந்தாப்பூர் துணை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாதிக்கப்பட்ட துகாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகன்கள் சஞ்சய் மற்றும் ராஜேந்திர ராவத் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெற்றோரையே மகன்கள் தடியால் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com