

பிரபல கண்டுபிடிப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் நிறுவிய ‘இமாலயன் ஆல்டர்நேட்டிவ்ஸ் கல்வி நிறுவனம்’ நடத்தி வரும் ‘டெசர்ட் பிளவர்’ பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு லடாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் ஃபியாங் பகுதியில் அமைந்துள்ள இந்த டெசர்ட் பிளவர் பள்ளி, அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முறையான ஒப்புதல், அனுமதிகள் அல்லது சான்றிதழ்களைப் பெறாமல் வகுப்புகள் மற்றும் இதர செயல்பாடுகளைத் தொடங்கியதாகக் கூறி, லே பகுதி வட்டாட்சியர் அலுவலகம் நவம்பர் 1 ஆம் தேதி இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸ், சோனம் வாங்சுக்கின் மனைவியும், இக்கல்வி நிறுவனத்தின் இணை நிறுவனருமான கீதாஞ்சலி ஜே. ஆங்மோவிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கியக் காரணம், கல்வி நிறுவனத்திற்கு லடாக் நிர்வாகத்தால் முன்பு ஒதுக்கப்பட்ட சுமார் 134.5 ஏக்கர் நில ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்ததுதான்.
இந்த நில ரத்து நடவடிக்கைக்கு எதிராக இக்கல்வி நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு தற்போது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ள லே வட்டாட்சியர், நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரை பள்ளியின் செயல்பாடுகள் குறித்து எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்றும், தற்போதைய நிலையையே தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் கல்வித்துறையில் உலகளவில் புகழ்பெற்ற சோனம் வாங்க்சுக்கின் கல்வி நிறுவனத்திற்கு எதிராக லடாக் நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.