

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் வைத்து முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இத்துடன் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சென்ற காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு திடுக்கிடும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். இவ்வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 10வது நபரான ஜட்டின் குறித்தும், முந்தைய கைது நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான விவரங்கள் வெளியாகியுள்ளன.
அரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த ஜட்டின் என்பவரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்த முக்கியக் குற்றவாளியாக இவர் செயல்பட்டுள்ளதாகப் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மும்பை காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர். இவரை முறைப்படி காவலில் எடுத்து விசாரணை நடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜட்டின் கைது செய்யப்படுவதற்கு முன்பு, சோனிபட்டைச் சேர்ந்த அங்கீத் ராஜேஷ் கட்டாக் மற்றும் சமீர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் அங்கீத் என்பவன் மும்பையில் சுமார் 20 நாட்களுக்கும் மேலாகத் தங்கியிருந்து, துப்பாக்கிச்சூடு நடத்தும் நபர்களுடன் சேர்ந்து நடிகர் சென்ற பகுதிகளை உளவு பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தச் சதியின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளுடனும் அவன் தொடர்பில் இருந்துள்ளான்.
இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை (குனால், சுமித், ராதா மற்றும் பபிதா) டெல்லி காவல்துறையின் சிறப்புப் படை அண்மையில் கைது செய்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்குத் தேவையான துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விநியோகித்தவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர்கள் மும்பை காவல்துறைவசம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கு முன்பாக, துப்பாக்கிச்சூட்டில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும், பிரபல ரவுடி அனில் பண்டிட் என்பவருக்கும் இடையே உள்ள குற்றப்பின்னணித் தொடர்புகள் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பன்னாட்டு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பெரிய ஆயுதக் கடத்தல் வலையமைப்புடன் இந்தத் தாக்குதலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.