

'மிகத் தீவிர' சூறாவளி புயலான 'அர்னாப்', இன்று (புதன்கிழமை) அதிகாலை ஆந்திர பிரதேச கடற்கரையில் கரையை கடக்க தொடங்கியது. இந்த நிகழ்வு இரண்டு மணிநேரம் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளி புயல், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, யானத்திற்கு தெற்கே கரையை கடக்க தொடங்கியது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ வரை இருந்ததாகவும், அவ்வப்போது 150 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக். 28) அதிகாலை 1:20 மணியளவில் இந்த கரையை கடக்கும் நிகழ்வு தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா கூறுகையில், "அடுத்த நான்கு மணிநேரத்திற்கு காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 150 கி.மீ வேகத்திலும் இருக்கும். புயலின் ஒரு பகுதி ஏற்கனவே நிலப்பகுதியை அடைந்துவிட்டது; முழு நிகழ்வும் முடிவதற்கு சுமார் நான்கு மணிநேரம் ஆகும்" என்று தெரிவித்தார்.
இதன் தாக்கத்தால், ஆந்திர பிரதேச கடற்கரை பகுதிகள், யானம் மற்றும் தெற்கு ஒடிசாவின் சில பகுதிகளில் பலத்த மழையும், பலமான காற்றும் தொடர்ந்து வீசி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.