அதிகரிக்கும் கொரோனா- கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கியது சீரம்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் உயர்வால் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி பாதிப்பு 7,946 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 223 நாட்களில் இல்லாத அளவுக்கு தற்போது ஒரு நாள் பாதிப்பு உயர்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4 கோடியே 42 லட்சத்து 4 ஆயிரத்து 771 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியதாவது:

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது. எனவே இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சீரம் நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com