வந்தே மாதரம் பாடப்படும் போது உதடுகள் கட்டாயம் அசைய வேண்டும் : சுவேந்து அதிகாரி

வந்தே மாதரத்தின் முழு பதிப்பை பாடாத பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி நிறுத்தப்படும் என சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
CM Suvendu Adhikari warns
Published on

மேற்கு வங்கத்தில் பள்ளி பிரார்த்தனைகளின் போது வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடாத பள்ளிகளுக்கு, அரசு நிதியுதவி மற்றும் இதர அரசு உதவிகள் நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் கடந்த கால ஆட்சியில், மாநிலத்தின் கல்வி முறை அழிவின் விளிம்பிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.

மேலும் பள்ளி கல்வியில் இந்திய கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் தேசியவாத விழுமியங்களை மீட்டு எடுப்பதற்காக, தற்போதைய பாரதிய ஜனதா கட்சி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

கொல்கத்தாவிம் கோல்பார்க்கில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் விவேகானந்தா வித்யா பாரதி விகாஸ் பரிஷத்தின் ஆண்டு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உரையாற்றினார்.

அப்போது அவர், “வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரிடம், அரசு உதவி நிறுத்தப்படும் என்று அவர்களிடம் கூறினேன்.

அதன் பிறகு அவர்கள் அதனை முழுமையாக பாடுவதற்கு ஓரளவு சம்மதித்தார்கள். வந்தே மாதரம் ஒலிக்கப்பட்ட போது அவர்கள் எழுந்து நின்றார்கள், ஆனால் உதடுகளை அசைக்கவில்லை. அப்போது நான் அவர்களிடம் உதடுகளும் அசைய வேண்டும் என்று கூறினேன்.

பள்ளிப் பாடத்திட்டங்களில் 'மா', 'ஜல்' மற்றும் 'ஆகாஷ்' போன்ற வார்த்தைகள் மாற்றம் செய்யப்பட்டு முறையே 'அம்மா', 'பானி' மற்றும் 'அஸ்மான்' என்று மாற்றம் செய்யப்பட்டள்ளன.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆளுமைகளின் கற்பித்தல் கருத்துக்களுக்கு மாறாக இந்த "நுட்பமான மாற்றங்கள்" இருந்தது.

கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படையை (என்.சி.சி) தடை செய்ததன் மூலம், முந்தைய அரசு மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளது.

ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை

நான் சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலாவதாக, மாநிலத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் ராணுவத்தை மையமாக கொண்ட பல உயர்நிலை ‘சைனிக்’ பள்ளிகளைக் கட்டுமாறு அவரை வலியுறுத்தினேன்.

இரண்டாவதாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் என்.சி.சி-யைக் கட்டாயமாக்க அனுமதி கோரி அவருக்குக் கடிதம் எழுதுவேன் என்று கூறினேன்.

நான் ஏற்கனவே அவருக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டேன். தேவையானதைச் செய்வதாக அவரிடமிருந்து உறுதிமொழியையும் பெற்றுள்ளேன்.

மாற்றத்தை கொண்டு வருவதிலும், வாய்ப்புகளை வழங்குவதிலும் மேற்கு வங்க மக்கள் கால அவகாசம் அளிக்கிறார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸுக்கு அவர்கள் கால அவகாசம் கொடுத்தார்கள், அதைத் தொடர்ந்து வந்த ஐக்கிய முன்னணி மற்றும் இடது முன்னணி அரசுகளுக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கினார்கள்.

சரியான நேரத்தில் மாற்றம்

மேலும் கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் கால அவகாசம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில் பின்பற்றப்பட்ட கல்விக் கொள்கை இன்னும் சில காலம் தொடர்ந்திருந்தால், நமது விழுமியங்கள், நமது பாரம்பரியம், நாட்டுப்பற்று மற்றும் தேசியம் ஆகியவை என்றென்றைக்குமாக அழிந்துபோகும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கும்.

மாநிலத்தில் மக்கள் சரியான நேரத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்; கல்வி முறையை மீட்டெடுக்கவும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கவும் சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளது.

பள்ளி சேர்க்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான முன்னாள் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், குதிராம் போஸ் மற்றும் மாதங்கினி ஹஸ்ரா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பாடப்புத்தகங்களில் காண்பது கடினமாக இருந்தது” என்று சுவேந்து அதிகாரி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com