

முன்னாள் மந்திரி பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ஜீசான் அக்தர் பெயரில், இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் முன்னாள் மந்திரி பாபா சித்திக். இவர் கடந்த 2024-ம் ஆண்டு மும்பை பாந்திரா பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜீசான் அக்தரை போலீசார் தேடிவருகின்றனர். இந்தநிலையில் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஜீசான் அக்தர் பெயரில் குரல் பதிவு குறுந்தகவலில் வந்துள்ளது.
இதுகுறித்து சயீப் அலிகான் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜீசான் சித்திக் கொலை மிரட்டல் விடுத்துள்ளாரா? அல்லது அவரின் பெயரில் வேறு யாரும் மிரட்டல் விடுத்துள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜீசான் அக்தர் பெயரில் நடிகர் சயீப் அலிகான் செல்போனுக்கு மிரட்டல் குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பாபா சித்திக்கு நேர்ந்த கதிதான் நடிகருக்கும் ஏற்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டல் உண்மையில் ஜீசான் சித்திக்கிடம் இருந்துதான் வந்துள்ளதா? அல்லது அவரைப்போல வேறு யாரும் அனுப்பினார்களா? என விசாரித்து வருகிறோம்" என்றார்.
சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் நடிகர்கள் துஷார் கபூர், ஆயுஷ்மான் கொரோனாவுக்கு கொலை மிரட்டல் வந்தது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெங்களூருவை சேர்ந்த 30 வயது ஐ.டி. ஊழியர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.