

எருமேலி, வண்டிப் பெரியாரில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் தலா 2 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜை வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாளை (16-ந் தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு புதிய மேல்சாந்திகள் பதவியேற்கின்றனர்.
நாளை மறுநாள் (17-ந் தேதி) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மண்டல கால பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 27-ந் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. நாளை 30 ஆயிரம் பேருக்கும், 17-ந் தேதி முதல் தினமும் 80 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் 60 ஆயிரம் பேருக்கும், நிலக்கல்லில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர் மூலம் 10 ஆயிரம் பேருக்கும் எருமேலி, வண்டிப்பெரியார் வனப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்காக ஆன்லைன் மூலம் தலா 3 ஆயிரம் பேருக்கும், எருமேலி, வண்டிப் பெரியாரில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் தலா 2 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.
சபரிமலை ஐய்யப்பனை தரிசிக்க இன்று இரவு முதலே பக்தர்கள் குவிந்தாலும், அவர்கள் நிலக்கல்லை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாளை பகல் 12 மணிக்கு பின்னரே அவர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.