

அரியானாவில் பங்குசந்தை போன்ற ஆன்லைன் தளங்களில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என கூறி சுமார் 8 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை பஞ்ச்குலா போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானாவில் ராஜேஷ் குமார் என்ற நானா என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வரை தள்ளுவண்டியில் உணவு விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து ராஜேஷின் நண்பரான பிரமோத் கம்போஜ், ப்ளூம் கம்பேனி என்ற ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் ராஜேஷ் ஆரம்பத்தில் ரூபாய் 7,500 முதலீடு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர் ரூபாய் 2 லட்சம் வரை முதலீடு செய்து, அதில் முதலீடு செய்யுமாறு மற்றவர்களையும் அந்த திட்டத்தில் சேர்த்துள்ளார்.
இதையடுத்து மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து முதலீட்டாளர்களை ராஜேஷ் ஈர்த்துள்ளார்.
இதில் வந்த லாபத்தில் அவருக்கு மெர்சிடிஸ் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர் குறுகிய காலத்தில் ரூபாய் 2 கோடி வரையில் சம்பாதித்துள்ளார்.
இந்த நிலையில் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான அசோக் குமார், தன்னிடம் இருந்தும் தனது உறவினர்களிடம் இருந்தும் சுமார் 8 கோடி ரூபாய் வரையில் ராஜேஷ் மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவர் அந்த புகாரில், சுஷில் குமார் என்பவர் தன்னை ஆன்லைன் திட்டத்தில் முதலீடு செய்யும்படி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து முதலில் தான் ரூ.8,500 முதலீடு செய்து அதை திரும்ப பெற்றதால், பின்னர் கடன் பெற்று சுமார் ரூ.3.5 லட்சம் வரை முதலீடு செய்ததாக கூறினார்.
மேலும் அவர், தனது உறவினர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து, சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து, காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, ராஜேஷ் குமார், உதம் சிங், சுஷில் குமார் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து மெர்சிடிஸ் பென்ஸ், இரண்டு ஆடி கார் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரவீந்தர் பங்கர், சதீஷ் மோக்ரா, தேவிந்தர் பங்கர், கரம்ஜீத், பி.எஸ். ரந்தாவா மற்றும் ஹேப்பி ஷேக் ஆகியோர்களுக்கு எதிராக தேடுதல் சுற்றறிக்கையை அனுப்பி பஞ்ச்குலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.