

ஐதராபாத்தில் ஒரு தகரக் கொட்டகையில் ரகசியமாக பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தி செய்து, அதன்மூலம் ரூ.160 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்து வந்ததை மண்டல அளவிலான மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக இருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹைதராபாத் புகையிலை உற்பத்தி
ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தி செய்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த வளாகத்தில் சிஜிஏஸ்டி அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ரகசியமாக புகையிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 40 FFS (ஃபார்ம்-ஃபில்-சீல்) பேக்கிங் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அந்த சோதனையில், 56 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அந்த ஆலையில், பான் மசாலா மற்றும் நறுமண ஜர்தா ஆகியவற்றின் பல பிராண்டட் தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
பறிமுதல்
இந்த நடவடிக்கையில், சுமார் 5,500 கிலோ எடையுள்ள பொட்டலங்களும், ரூ. 76 லட்சம் மதிப்புள்ள சரக்குகளும், 2,015 கிலோ பான் மசாலா மற்றும் 810 கிலோ புகையிலை அடங்கிய மூலப்பொருட்களும், சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பொட்டலமிடும் பொருட்கள், 40 FFS இயந்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மத்திய வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கையிருப்பு, இயந்திரங்களின் அளவு, மனிதவளம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், கண்டறியப்பட்ட மொத்த சுங்க வரி மற்றும் செஸ் வரி ஏய்ப்பு சுமார் ரூ. 160 கோடி ஆகும்” என்று தெரிவித்தனர்.
செஸ் வரி சட்டம்
பான் மசாலா மற்றும் புகையிலைத் துறையில், 2026 பிப்ரவரி 1 முதல் கொள்ளளவு அடிப்படையிலான செஸ் மற்றும் வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
2025-ஆம் ஆண்டின் HSNS செஸ் சட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட பேக்கிங் இயந்திரங்களின் எண்ணிக்கை, வகை மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, பான் மசாலா மீது கொள்ளளவு அடிப்படையிலான மாதாந்திர செஸ் விதிக்கப்பட்டு வருகிறது.
1944 ஆம் ஆண்டு மத்திய கலால் சட்டத்தின் கீழ், மெல்லும் புகையிலை, ஜர்தா மற்றும் குட்கா ஆகியவற்றின் மீதும் இதேபோன்று கொள்ளளவு அடிப்படையிலான மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது.
கைது
இந்த நிலையில் ரூ.160 கோடி மதிப்பிலான சுங்க வரி மற்றும் செஸ் வரி ஏய்ப்பு செய்து, ஆலையை நிர்வகித்து வந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அதிகாரிகள் அடைத்தனர்.