

போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த வீரேந்திர சிங் பசோயாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, போதைப்பொருள் கடத்தல் கட்டுப்பாட்டு பிரிவினர் இந்தியாவிற்கு அழைத்து கொண்டு வந்தனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பசோயாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
கடந்த 2024 பிப்ரவரி 21 அன்று, புனே காவல்துறை டெல்லியில் திவேஷ் சரண்ஜித் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோரை கைது செய்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த சுமார் 970 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தது.
இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “சர்வதேச சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சரக்கு, லண்டனுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட இருந்தது.
வீரேந்திர பசோயாவின் தலைமையில் பூட்டானி மற்றும் சந்தீப் குமார் ராஜ்பால் பசோயா ஆகியோர், இந்த போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சுமார் ரூ.13,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பசோயா என்பவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு தேடி வந்தனர்.
மேலும் அவருடைய மகன் ரிஷப் பசோயாவுக்கு எதிராகவும் இண்டர்போல் அதிகாரிகள் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் டெல்டா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீப் ஹனுமான்சிங் யாதவ் மற்றும் நிறுவன மேலாளர் தேவேந்திர ராம்ஃபுல் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை ஒரு வழக்கமான வர்த்தக சரக்கு போல் மாற்றி, பாதுகாப்பு சோதனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு ஏற்றுமதி செய்தது தெரியவந்தது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பசோயாவின் கைது நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசு, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இடைவிடாமல் தேடிப்பிடித்து, அவர்களை முழுமையாக அழித்து வருகிறது.
போதைப்பொருட்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தப்பியோடிய போதைப்பொருள் மன்னன் வீரேந்தர் சிங் பசோயாவை அதிகாரிகள் என்சிபி மீட்டுள்ளது.
குற்றவாளியை முழுமையாக பின்தொடர்ந்ததன் மூலம், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும், இந்திய சட்டத்தின் கரத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது என்பதை நமது அமைப்புகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.