

நவம்பர் 1 இந்தியா கூட்டணி பேரணி நிகழ்வை தள்ளி வைக்க கோரி டெல்லி வர்த்தகர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நவம்பர் 1 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆர் மோசடிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்படவுள்ள பிரமாண்ட பேரணிக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த பேரணி நடைபெற உள்ளது. நவம்பர் 8 தீபாவளி என்பதால் நவம்பர் 1 இந்தியா கூட்டணி நடத்த உள்ள பேரணியால் தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் எனும் கலக்கத்தில் டெல்லி வியாபாரிகள் உள்ளனர்.
டெல்லியில் உள்ள 20 முக்கிய சந்தைகளில் ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரையிலான வர்த்தகத்தை இந்த பேரணி பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே இந்த பேரணியை ஒத்துவைக்குமாறு டெல்லி வர்த்தகர்கள் அமைப்பான வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (சி.டி.ஐ) மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வலியுறுத்தியது.
இந்தியா கூட்டணி பேரணி நிகழ்வில் சுமார் 10 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள். சுமார்15,000 முதல் 20,000 வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், மத்திய டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சந்தைகளுக்கு செல்லும் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று சி.டி.ஐ கவலை தெரிவித்துள்ளது.
எனவே சோனியா காந்திக்கு சி.டி.ஐ எழுதியுள்ள கடிதத்தில், " ராம்லீலா மைதானத்தில் 200 பெரிய பேருந்துகளை நிறுத்தக்கூட போதுமான இடம் இல்லை. இது நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள 20 மொத்த மற்றும் சில்லறை சந்தைகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்.
மேலும் இந்த நிகழ்வால் நகரில் போக்குவரத்து நெரிசலும், ஊரடங்கு போன்ற சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நவம்பர் 1ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த 10 லட்சம் மக்கள் கூடும் மாபெரும் கூட்டத்தை, தீபாவளிக்கு அடுத்த நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.
சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், "இந்த 20 சந்தைகளும் வெறும் வர்த்தக மையங்கள் மட்டுமல்ல; அவை டெல்லியின் உயிர்நாடி. இங்கு தினமும் ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த பேரணி தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று வர்த்தகர்கள் கவலைப்படுகிறார்கள். தீபாவளியின் உச்சக்கட்ட வர்த்தகக் காலத்தில் எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனப்பூர்வமான வேண்டுகோளை விடுக்கிறோம்," என்றார்.
முன்னதாக ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதால் நவம்பர் 1 பேரணியை தள்ளி வைக்க கோரி ராகுல் காந்திக்கு வர்த்தகர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இருந்தும் சாதகமான பதில் வராததால் தற்போது சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.