

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மாபெரும் பசுமை எரிசக்தி திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநருமான ஆனந்த் அம்பானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியில் ராயலசீமா தோட்டக்கலைத்துறை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து ரிலையன்ஸ் குழுமத்தின் ஆனந்த் அம்பானி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ஆந்திராவின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்குஎடுத்துச் செல்லும் இந்த மெகா முதலீட்டுத் திட்டத்தை வெளியிட்டார்.
ஆந்திராவில் அழுத்தப்பட்ட உயிரிவாயு ஆலைகளை அமைப்பதற்காகவே இந்த ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
இது குறித்து ஆனந்த் அம்பானி பேசியதாவது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது விவசாயிகள், தற்போது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதிசெய்து வருகின்றனர். ஆந்திராவில் பசுமை எரிசக்தி திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்பை வழங்கிய மாநில அரசுக்கு ரிலையன்ஸ் குழுமம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த அழுத்தப்பட்ட எரிவாயு ஆலைகள் மூலம் ஆந்திராவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், வரும் ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் மூலம் மாநில அரசுக்கு ரூ. 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்கும் என்று கூறினார்.
ஆந்திர அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் 2024 முதல் தற்போது வரை மாநிலத்தில் சுமார் 388 மெகா திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பு ரூ. 14 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதுடன், ரூ.11 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த மொத்த முதலீடுகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு (1/3rd) பின்தங்கிய ராயலசீமா பகுதிக்குச் செல்கிறது. அந்த வகையில் ராயலசீமா பசுமை எரிசக்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தித்துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
தொழில்நுட்ப நிபுணத்துவம், டிஜிட்டல் திறன்கள் மற்றும் தொழில் கூட்டாண்மைகள் மூலம் ஆந்திராவின் புதிய வேளாண்மைப் பள்ளிக்கு ரிலையன்ஸ் குழுமம் தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும் என ஆனந்த் அம்பானி உறுதியளித்தார்.
மேலும், விழாவில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம், "என்னை ஆந்திராவின் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று ஆனந்த் அம்பானி மேடையில் அன்போடு வேண்டுகோள் விடுத்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.