

டெல்லி கண்டோன்மெண்ட் பிளாசாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று திரங்கா பேரணி நடத்த உள்ள நிலையில் மூவர்ண கொடியை அசைத்ததற்காக சிறை செல்ல தயாராக இருக்கிறோம் என அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்
டெல்லி கண்டோன்மெண்ட் பிளாசாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று (அக்டோபர் 16) திரங்கா (தேசியக் கொடி) பேரணி நடத்த உள்ளது.
முன்னதாக இந்த பேரணிக்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. அதே நேரம் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் வழிகாட்டுதல்களை உயர்நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி அபிஜித் தீப்கே தலைமையில் சிஜேபி பேரணி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக நேற்று இரவு பேட்டி அளித்த அவர், " தேசியக் கொடியை அசைத்ததற்காக சிறை செல்ல தயாராக இருப்பதாக" தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அமைதியாக சென்று மூவர்ணக் கொடியை அசைப்போம். இந்த நாட்டின் குடிமக்களாகிய நீங்கள் இதை ஒரு குற்றமாகக் கருதினால், நீங்கள்தான் மிகப்பெரிய துரோகி. இந்த நாட்டில் மூவர்ணக் கொடியை அசைப்பதற்காக நாங்கள் சிறைக்குச் செல்ல நேர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயார்" என்று அவர் கூறினார்.
சிஜேபி போராட்டம் நடைபெறவிருக்கும் கண்டோன்மெண்ட் பிளாசா சென்ட்ரல் பார்க் மக்களுக்காக மூடப்பட்டது பற்றி பேசிய அவர், “ நாங்கள் 100 இடங்களில் மூவர்ணக் கொடியை அசைப்போம். அதற்காக நீங்கள் அந்த 100 இடங்களையும் மூடிவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக மாறுவேடமிட்ட காவல்துறையினர் தனது தங்குமிடத்தை சுற்றி வளைத்து, ஒரு வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் தன்னைப் பின்தொடர்ந்ததாக தீப்கே குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி , தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி. நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்றைய திரங்கா பேரணி நடைபெற உள்ளது.
13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த அமைப்பு, குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளது.
பேரணி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும். போராட்டப் பேரணி நடைபெறவுள்ள சென்ட்ரல் பார்க் மூடப்பட்டுள்ளது.
கண்டோன்மெண்ட் பிளாசாவில் ஒரு போராட்டத் தளம் அல்ல என்றும் கூறி, கூட்டத்திலிருந்து விலகி இருக்குமாறு டெல்லி காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்தப் பேரணியில் 11 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்று காவல்துறை ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்காக கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்றைய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.