மாடல் அழகி மூலம் பாலியல் விவகாரத்தில் சிக்க வைக்க சதி... மனம் திறந்த ராஜஸ்தான் அமைச்சர்

போட்டோ ஷூட் எடுப்பதாக கூறி மாடல் அழகியை பல்வேறு கோணங்களில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் குளிக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி பிளாக்மெயில் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் அமைச்சர் ராம்லால் ஜாட்
ராஜஸ்தான் அமைச்சர் ராம்லால் ஜாட்
Published on

ஜெய்ப்பூர்: 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளம் மாடல் அழகி ஒருவர், அங்குள்ள ஓட்டலின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சோந்த வருவாய்த்துறை அமைச்சர் ராம்லால் ஜாட்டை, மாடல் அழகி மூலம் பாலியல் விவகாரத்தில் சிக்க வைத்து, தாங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்ற சதி செய்ததும், சதித் திட்டத்திற்கு உடன்படாத மாடல் அழகி தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. 

மாடல் அழகி கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் அக்க்ஷத் சர்மா மற்றும் தீபாலி என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி அமைச்சர் ராம்லால் ஜாட்  மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் பில்வாராவில் இருந்தபோது, வெள்ளிக்கிழமை இரவு எனது உதவியாளரை இரண்டு பெண்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கூறி உள்ளனர். அப்போது இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் சமயத்தில் சந்திக்கும்படி கூறினேன். அதற்கு முன்னதாக செய்தி தொலைக்காட்சி நிறுவனர் என்று கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். அந்த பெண்கள் இருவரும் அந்த தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் என அறிமுகப்படுத்தினர்.

மூவரும் சனிக்கிழமை காலையில் வந்து என்னை சந்தித்து ஒரு ஆவணத்தை காட்டி அதில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி கூறினர். அதைப் படித்துப் பார்த்த நான், அது எனது துறை சார்ந்தது அல்ல என்று கூறி நிராகரித்துவிட்டேன். அவர்களை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. நான் மறுத்தபிறகு அவர்கள் வெளியேறிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரை சந்தித்துவிட்டு வெளியேறியபின்னர், அமைச்சருடன் நெருக்கமாக இருந்து எப்படியாவது ஆவணத்தில் கையெழுத்து பெற்றுவிட வேண்டும் எனக் கூறி மாடல் அழகியை வற்புறுத்தி உள்ளனர். 

போட்டோ ஷூட் எடுப்பதாக கூறி மாடல் அழகியை பல்வேறு கோணங்களில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் குளிக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி பிளாக்மெயில் செய்துள்ளனர். ஆனால், அதற்கு உடன்படாமல் ஜோத்பூர் திரும்பிய மாடல் அழகி, ஓட்டலுக்கு சென்று தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com