

தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள். மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முதலில் வலியுறுத்தினர்.
தற்போது 'இந்தியா' கூட்டணியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினம்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.
நீட் முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும் என்று நேற்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
சிஜேபி போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எங்கள் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நள்ளிரவில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் அவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள்.
1. பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.
2. மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள்.
3. மன்னிப்பு கேளுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.