

எதிலுமே தேவையற்ற அரசியல் உள்நோக்கத்துடன் கற்பனை செய்து கொண்டு பேய்களைப் பார்ப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பெருமைமிகு வணிகக் குழுமமான 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகக் குழு மற்றும் அதன் தலைவர் என்.சந்திரசேகரன் மறுநியமன விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்களும் பெருநிறுவனத் தலைவர்களும் தங்களது சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு மத்திய அரசு ஒரு அச்சுறுத்தலான சூழலை உருவாக்கியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்திய வணிகச் சூழலைத் தங்களது சுயநலத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பழைய 'லைசென்ஸ் ராஜ்' காலத்திய முறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த காலத்தில் இந்தியத் தொழில்முனைவோர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் முடக்கியது எதிர்க்கட்சிதான் என்று சாடினார். ஆனால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தொழில்முனைவோர்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூண்களாக மதிக்கிறது என்றும், தேவையில்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஒவ்வொரு விவகாரத்திலும் பேய்களைப் பார்ப்பதைப் போல எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
டாடா குழுமத்திற்கு உள்ளேயும், டாடா டிரஸ்ட் அமைப்பிலும் நிலவும் நிர்வாக மாற்றங்கள் மற்றும் பங்குச் சந்தை வெளியீட்டு விவகாரங்கள் குறித்துத் தேசிய அளவில் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான நேரடி அரசியல் மோதலாக மாறியுள்ளது. கார்ப்பரேட் ஆளுகை மற்றும் பெருநிறுவன விவகாரங்களில் அரசியல் கட்சிகள் தலையிடுவது தேவையற்ற குழப்பங்களை மட்டுமே ஏற்படுத்தும் என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.