தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியது என்ன?

30-ந்தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு.
Rahul Gandhi
ராகுல் காந்தி
Published on: 
Summary

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி எந்தச் சூழலிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தோற்கடிப்பதற்குத் தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை காங்கிரஸிடம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. தொகுதி மறுவரையறை மசோதாவைத் தீவிரமாக எதிர்ப்பதே கட்சியின் முடிவு என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அரசியல் ஆதாயத்திற்காகவே மத்திய அரசு இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் முக்கியக் கோரிக்கைகள்:

தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க வேண்டும்.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை தற்போதைய தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். மாநிலங்களின் மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும்.

இதற்கிடையே, நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் விவாதத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை என்றால் என்ன?

மக்கள்தொகை மற்றும் சட்டப்பூர்வ விதிமுறைகளின் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகள், எண்ணிக்கை மற்றும் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையே தொகுதி மறுவரையறை எனப்படுகிறது.

மத்திய அரசு 1971 மக்கள் தொகை அடிப்படையில் 50 சதவீதம் இடங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள இருக்கிறது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X