

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டேராபஸ்ஸி அருகே உள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான பல்ஜிந்தர் சிங். சிறு விவசாயியான இவர், லாரி டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார். 2 பிள்ளைகளின் தந்தையான இவருக்கு, எப்படியாவது லாட்டரியில் பெரிய பரிசு வென்று வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இருந்தது.
இதற்காக கடந்த 2010-ம் ஆண்டு முதல் பண்டிகை காலங்களில் தவறாமல் லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் திட்டக்கூடும் என்பதால், டிக்கெட் வாங்கும் விஷயத்தை தனது குடும்பத்தினரிடமிருந்து ரகசியமாகவே வைத்திருந்தார். 15 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்தும் இதுவரை எந்த ஒரு பெரிய பரிசும் இவருக்கு கிடைக்கவில்லை.
இருந்தாலும் தனது நம்பிக்கையை கைவிடாமல், இந்த தீபாவளி பண்டிகையையொட்டி பஞ்சாப் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட ‘டியர் தீபாவளி பம்பர் 2026' லாட்டரி டிக்கெட்டை ரூ.500 கொடுத்து வாங்கினார். இந்த குலுக்கலுக்காக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பெயர்களில் மொத்தம் 36 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் நவம்பர் 16-ந் தேதி இரவு இந்த லாட்டரிக்கான குலுக்கல் முடிவுகள் வெளியானது. இதில் பல்ஜிந்தர் சிங் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசான ரூ.12 கோடி ஜாக்பாட் அடித்தது. இரவு சுமார் 11 மணியளவில் தனது டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்ததை அறிந்ததும் அவர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக தனது நண்பர்களுடன் ஜிரக்பூரில் உள்ள லாட்டரி அலுவலகத்திற்கு சென்று பரிசு தொகையை பெறுவதற்கான நடைமுறைகளை முடித்தார்.
இது குறித்து பல்ஜிந்தர் சிங் கூறுகையில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் பண்டிகை காலங்களில் ரகசியமாக லாட்டரி வாங்கி வருகிறேன். ஒருநாள் எல்லாம் வல்ல இறைவன் என் பிரார்த்தனைக்கு செவிசாய்த்து எனக்கு அதிர்ஷ்டத்தை தருவார் என முழுமையாக நம்பினேன். இறுதியாக கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு பதிலளித்துவிட்டார். இந்த பரிசு தொகையில் கணிசமான பகுதியை எனது 2 பிள்ளைகளின் உயர்கல்விக்காக செலவிட திட்டமிட்டுள்ளேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சாதாரண விவசாயியும், லாரி டிரைவருமான பல்ஜிந்தர் சிங்கிற்கு ரூ.12 கோடி பரிசு விழுந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து, ஹுமாயுன்பூர் கிராமமே விழாக்கோலம் பூண்டது. ஊர் மக்கள் திரண்டு வந்து அவரது குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 ஆண்டு கால பொறுமைக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த இந்த பரிசு அந்த குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது.