

படிவம் 6 இல் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து தேர்தல் ஆணையத்தை ராகுல் விமர்சித்துள்ளார்
எஸ்ஐஆர் நடைமுறையில் இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமலேயே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தேர்தல் குழு பல முடிவுகளை எடுத்ததாக குற்றம்சாட்டும் மனுக்களை நேற்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அதில் குறிப்பாக மற்ற தேர்தல் ஆணையர்களுடன் கலந்தாலோசிக்காமல் புதிய வாக்காளர் பதிவுக்குப் பயன்படுத்தப்படும் படிவம் 6 இல் ஞானேஷ் குமார் மாற்றங்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே பதிலளித்த தேர்தல் ஆணையம், எஸ்ஐஆர் படிவம் 6 உடன் இணைக்கப்பட்டிருந்த அறிவிப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில் நேற்றைய விசாரணையின்போது, படிவம் 6ல் செய்யப்பட்ட மாற்றங்களுக்குத் தாம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
படிவத்தை மாற்றியவர் யார் என்பதைக் கண்டறிய, அது தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ள உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு வரும் வரை ஞானேஷ் குமார் எந்த முடிவும் எடுப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
படிவம் 6இல் மாற்றம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் முன்னதாக தெரிவித்திருந்ததையும் அத்தகைய மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்ததியதையும் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் படிவம் 6ஐ திருத்தியுள்ளார் என்பது தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு உதவுவதற்காக அவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு இது மற்றுமொரு சான்றாகும்.
நமது ஜனநாயகத்தின் மீதான இந்தக் தாக்குதலில் ஈடுபட்ட அவரும் மற்ற அனைவரும் பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் மூலம் ஞானேஷ் குமாரைக் கைது செய்யக் கோரியுள்ளது.
"ஞானேஷ் நாடு முழுவதும் வாக்குகளைத் திருடி வருகிறார். தற்போது அவர் பிடிபட்ட நிலையில், தேசத்தை தவறாக வழிநடத்தும் நோக்கில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறார். ஞானேஷை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்," என காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.