3 நாள் மிசோரம் பயணம்: பழங்குடியினர் அருங்காட்சியகத்தை காண்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பாதுகாத்துப் போற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
  President Murmu
Published on: 
Summary

ஐஸ்வாலுக்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நாளை பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய மிசோ கிராமத்தைப் பார்வையிட உள்ளார். திங்கள்கிழமை மிசோரம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

மூன்று நாள் பயணமாக மிசோரம் மாநிலத்திற்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஐஸ்வால் வந்தடைந்தார். குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு வடகிழக்கு மாநிலமான மிசோரமுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

கேரளாவிலிருந்து விமானம் மூலம் வந்தடைந்த அவரை, லெங்புய் விமான நிலையத்தில் மிசோரம் ஆளுநர் விஜய் குமார் சிங், முதல்வர் லால்துஹோமா, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் வன்லல்த்லானா, தலைமைச் செயலாளர் கில்லி ராம் மீனா மற்றும் காவல்துறைத் தலைவர் சரத் அகர்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து லோக் பவனில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கண்காட்சிப் பார்வை

வருகைக்குப் பிறகு லோக் பவனின் மேல் புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைக் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். வணிகம் மற்றும் தொழில்கள், பட்டு வளர்ப்பு, தோட்டக்கலை, கலை மற்றும் கலாச்சாரம், கூட்டுறவு மற்றும் வேளாண்மைத் துறைகளின் தயாரிப்புகள் மற்றும் திட்டங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குடியரசுத் தலைவரைக் கவுரவிக்கும் வகையில் மாநில அரசு சார்பில் விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள்

பயணத்தின் இரண்டாவது நாளான நாளை (நவம்பர் 29), கெல்சி பகுதியில் உள்ள ரோபுய்லியானி பழங்குடியினர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்தைக் குடியரசுத் தலைவர் முர்மு பார்வையிட உள்ளார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பாதுகாத்துப் போற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அஅதனைத் தொடர்ந்து, ஐஸ்வால் அருகே உள்ள ஃபால்கான் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய மிசோ கிராமத்திற்குச் செல்லும் அவர், அங்கு நடைபெறும் 'லிவிங் மியூசியம்' கலை நிகழ்ச்சியைக் காண உள்ளார்.

நாகாலாந்து பயணம்

பயணத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை (நவம்பர் 30), மிசோரம் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா மற்றும் அதன் வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். மிசோரம் பயணத்தை நிறைவு செய்த பின்னர், டிசம்பர் 1-ஆம் தேதி நாகாலாந்தின் கிசாமாவில் நடைபெறும் 27-வது ஹார்ன்பில் திருவிழாவின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

X