

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த பயங்கர வெடிவிபத்தில், பட்டாசு ஆலை கட்டிடம் மற்றும் அருகில் இருந்த ஆறு வீடுகள் தரைமட்டமானதில், எட்டு குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆலையின் உரிமம் 2024-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது.
"உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் விமானப்படை பிரிவினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் அந்த ஆலைக்கு அருகிலேயே வசித்து வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
கௌசாம்பி மாவட்ட ஆட்சியர் அமித் பால் கூறுகையில், மனோரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும், அதன் தாக்கத்தால் ஆலைக்கு அருகில் இருந்த ஐந்து முதல் ஆறு வீடுகள் வரை இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தார்.
"இந்த ஆலைக்கு 2019-இல் வெடிபொருள் பயன்பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட்டது; இது 2026 வரை செல்லுபடியாகும் வகையில் இருந்தது. இருப்பினும், 2024-இல் அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது.
உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் ஆலை எவ்வாறு தொடர்ந்து இயங்கியது என்பதை கண்டறியவும், ஒவ்வொரு நிலையிலும் பொறுப்பை நிர்ணயிக்கவும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.