கற்பித்தலில் ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Droupadi Murmu
Published on

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

தனது செய்தியில், ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை குடியரசு தலைவர் நினைவு கூர்ந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய அவர், ஒரு அறிஞராக, தத்துவஞானியாக மற்றும் ஆசிரியராக ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார்.

ஆசிரியர்களுக்கு வாழ்த்து:

"ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள நமது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் தினம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த எழுத்தாளரும் தத்துவஞானியுமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். இந்த நன்னாள் வேளையில், அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். ஆசிரியர்கள், தங்கள் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் மூலம், திறமைகளை வளர்ப்பதிலும் குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

குடியரசு தலைவர் வலியுறுத்தல்:

மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும். அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஒரு ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார்.

ஆசிரியர்கள் தங்கள் அறிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும். அவர்கள் மாணவர்களிடையே சுயசிந்தனையை ஊக்குவித்து, ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்," என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

ஆசிரியர்களுக்கு நன்றி:

கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்று கூறினார்.

"தங்கள் பங்களிப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்," என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, ஜனாதிபதி 25 ஆசிரியர்களையும் கௌரவிக்க உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com