கேப்டன் ஸ்மித் மச்சார் குறித்து தேசமே பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு

கேப்டன் ஸ்மித் மச்சார் வீரமும், இக்கட்டான சூழலிலும் அவர் வெளிப்படுத்திய சமயோசிதமும் நம் அனைவரின் மனதையும் ஆழமாகத் தொட்டுள்ளன.
Droupadi Murmu -  Smith machar
Published on: 
Summary

மிகவும் ஆபத்தான சூழலில் படுகாயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பதில் ஸ்மித் மச்சார் உறுதியுடன் செயல்பட்டார் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி உள்ளார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

விமானத்தில் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் தனது சக விமானியான துணை விமானியால் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கேப்டனிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டைப் பறித்த அந்த கொடூர துணை விமானி, தற்கொலைத் தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்லச் சதி செய்தார்.

கேப்டன் ஸ்மித் மச்சர் காயமடைந்த நிலையிலும், விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானியுடன் கடுமையாகப் போராடி, விமானம் விபத்துக்குள்ளாகாமல் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாகத் தரையிறக்கி காப்பாற்றினார்.

விமானத்தில் இருந்த 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரின் துணிச்சலான செயலையும், தேசப்பற்றையும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசைக்க முடியாத மன உறுதிக்கு தலைவணங்குகிறேன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கேப்டன் ஸ்மித் மச்சார் குறித்து தேசமே பெருமிதம் கொள்கிறது. அவரது வீரமும், இக்கட்டான சூழலிலும் அவர் வெளிப்படுத்திய சமயோசிதமும் நம் அனைவரின் மனதையும் ஆழமாகத் தொட்டுள்ளன.

மிகவும் ஆபத்தான சூழலில் படுகாயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பதில் அவர் உறுதியுடன் செயல்பட்டார். அவரது துணிச்சலும் துரிதமான நடவடிக்கையும் ஒரு பெரும் துயரத்தைத் தவிர்க்கவும், பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் உதவின.

அவரது தளராத மன உறுதியை நான் வணங்குகிறேன். அவர் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com